அனைத்துலக மனித உரிமைகள் நாளான நேற்று வடமராட்சிப் பகுதியில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்று விடுவோம் என, சிறிலங்கா காவல்துறை அதிகாரி மிரட்டிய சம்பவத்துக்கு, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தினார் என்று கூறப்படுகிறது.
இதன்போது, காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியை காண்பித்து, தான் நினைத்தால் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்வேன் என்றும், இளைஞனை மிரட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு எதிராக எந்த விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில், சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினரும் காவல்துறை இவ்வாறு மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், எம்.கே. சிவாஜிலிங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.