மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலும் , மட்டக்களப்பிலும், நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள பாரதியார் சிலை அருகே, நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், பாலச்சந்திரன், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண சபையின் உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் இந்த உருவச்சிலை, மட்டக்களப்பு– ஊறணியில் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.