போட்டியாக மாறக் கூடிய நிறுவனங்களை கையகப்படுத்துவது போன்ற தொழில்விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, முகநூல் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்க அரசும்48 மாகாண அரசுகளும், வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
முகநூல் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்க அரசின், தேசிய தொழில் ஆணையத்தின் சார்பிலும், 48 மாகாணங்களின் சட்டமா அதிபர்கள் சார்பிலும், ஒரே நேரத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழில் செய்வதற்கான பொதுநடைமுறைகளை, முகநூல் நிறுவனம் மீறியுள்ளதாகவும், தனக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படும் சிறு நிறுவனங்களை மிரட்டுவது, நசுக்குவது என, நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முகநூல் நிறுவனம் சர்வாதிகாரமாக செயற்படுவதை தடுக்க வேண்டும். இனி வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு, அரசின் முன் அனுமதியை பெற உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.