13 வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், இந்தியா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு இந்திய தூதுவர் கோபால் பாக்லே பதிலளிக்க மறுத்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே, இந்தியத் தூதுவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள இந்திய தூதுவர், “பிரிக்க முடியாத,வலுவான பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ சிறிலங்கா என்பது இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா வலுப்படுத்துவதை முக்கியமானதாக இந்தியா கருதுவதாகவும், மக்கள் அனைவரும் தங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளின் அடிப்படையில் முன்னேறுவதை உறுதி செய்வதில் பங்களிப்பை வழங்க இந்தியா தயராகவுள்ளதாகவும் இந்திய தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.