திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வழக்கில் தானும் ஏனைய இரு வழக்கில் சட்டத்தரணி சயந்தனும் ஆஜராகியிருந்தோம்.
இதில் கன்னியா வெண்ணீருற்று பகுதில் பிள்ளையார் கோவில் ஒன்றினை அமைப்பது தொடர்பான வழக்கு ஒன்றாகும். அங்கு பௌத்த தாதுகோபுரம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவு ஒன்றிணைப்பெற்றிருந்தோம்.
அரச தரப்பு அங்கு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள். தாதுகோபுரத்தினை கட்டமாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்குவதற்கு தயார் எனவும் தெரிவித்திருந்தார்கள்.
எங்கே அந்த பிள்ளையார் கோவிலை கட்டுவது தொடர்பான இடத்தினை காண்பித்தார்கள் ஆனால் அந்த இடம் எங்களுக்கு ஏற்புடையதாகயிருக்கவில்லை.
ஆகையினால் நாங்கள் காண்பிக்கின்ற இடத்தினை அவர்கள் பார்வையிட்டு அங்கு தொல்பொருட்கள் இல்லையென்ற உறுதிமொழியை வழங்கிய பின்னர் அங்கே கட்டலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது பாரிய முன்னேற்றம். இந்த வழக்கு பெப்ரவரி 03ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நில அளவையிலாளர்கள் நாங்கள் காண்பிக்கும் இடங்களுக்கு சென்று அது பொருத்தமான என்பதை பார்த்து அனுமதியை வழங்கிய பின்னர் அங்கு பிள்ளையார் ஆலயம் கட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





