உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் மருத்துவ சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி முடக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.