இந்தியாவின் ஆலோசனைப்படியே வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்காமல் ஒதுங்கியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதனைக் கடுமையாக எதிர்த்து உரையாற்றியிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறித்தும், சுகாகாதார அமைச்சுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.
இவ்வாறு வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கியமைக்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை.
இந்தநிலையிலேயே, புதுடெல்லியில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தகவல் பரிமாறப்பட்டதாக கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தமது கரிசனைகளை சரியான முனையில் கவனத்தில் கொள்ளாதபோது, வடக்கு அரசியல்வாதிகளை கையாளுவதன் மூலம், தகவல்களை அனுப்பும் பழைய தந்திரத்தை புதுடெல்லி மீண்டும் கையாளுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.