விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுத்த மீன் வளத்துறையினரை கண்டித்து தமிழக மீனவர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மீன்பிடி விசைப்படகுகள், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி மறுத்தமையை கண்டித்தே இவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் இருந்து மீனவர்களின் மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி வந்து இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இதனால், புதிய விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படகுகளை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று புதிதாக இராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 23விசைப்படகுகளுக்கு, மீன்வளத் துறையினரால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி இரத்து செய்யப்பட்டது.
இதனை கண்டித்து படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.