யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பிசிஆர் சோதனைக்காக அனுராதபுரவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான முடிவுகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம், மருதனார்மடம் சந்தையில், 398 பேரிடம், பிசிஆர் சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 114 பேரின் மாதிரிகள் அனுராதபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பிசிஆர் சோதனை முடிவுகள் நேற்று மாலைக்குள் வெளியாகும் என்றும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்த பரிசோதனை முடிவுகள், 48 மணி நேரமாகியும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில், சுகாதார அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.





