கரைச்சி பிரதேச சபை அமர்வில் இரு வேறு சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால், உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினர் விஜயராயன் உரையாற்றும்போது, இரு வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.
உறுப்பினர் விஜயராயன் தனது உரையில் பிரதேசவாதம் பேசியதாக தெரிவித்தே அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது சுயேட்சைகுழு உறுப்பினரை நீ என விழித்து பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு பாரிய எதிர்ப்பு ஏற்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் ரஜனிகாந் சபையை விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்தும் பேசுவதற்கு தவிசாளர் அனுமதி வழங்கியதை அடுத்து, எதிர்த்தரப்பு உறுப்பினர்களான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரும் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.