வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து, பிரதான தமிழ்க் கட்சிகளுக்கு இடையில், ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். எனினும். அந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்தநிலையில், குறித்த ஆவணம் இரு தரப்பினராலும், பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் நகர்த்திச் செல்வது அவசியம் என்ற கருத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இதுதொடர்பாக ஆராய்ந்த பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை சுமந்திரனுக்குத் தெரியப்படுத்துவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனும், தமது தரப்பினருடன் இந்த ஆவணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரும் ஜெனிவாவுக்கு அப்பால் இந்த விவகாரத்தை கொண்டு செல்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சுமந்திரன் முன்வைத்த ஆவணம் தொடர்பாக இருதரப்பினாலும் மாற்று யோசனைகள் முன்வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.