வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் மற்றும் குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள் தங்கியிருந்த நிலையில், வவுனியாவிலுள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த மூன்றாம் திகதிக்கு பின்னர் அவர்களிடத்திலிருந்து எந்தவிதமான தொடர்புகளும் இல்லாது போயுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரமளவில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர், காணாமல்போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அந்தப் படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவிலுள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சிறிலங்காவில் உள்ள மொரோக்கோ நாட்டு தூதரகத்தின் ஊடாக இந்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு குடும்பத்தினர் இன்றையதினம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.