இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
கொட்டும் மழைக்கு மத்தியில் முல்லைத்தீவு கடற்கரையில் இன்று காலை ஆரம்பித்த இந்தப் பேரணி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் முடிவடைந்தது.
பேரணியின் முடிவில், இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி, சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கான மனுக்கள், மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்ற மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கத் தவறிய சிறிலங்கா அரசாங்கம், கடற்படை மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சென்றனர்.
இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.