யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர்களில் ஐவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 150 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு, மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.