தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் தனக்கெதிராக தாக்கல் செய்பப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இலட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்று கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். ” என்றும் கூறி, ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.