கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை தகனம் செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டபலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை மூதூர் மணிக்கூட்டு கோபுர சந்தியிலும் இன்று வௌ்ளைத் துணி கட்டப்பட்டது.
திருகோணமலை மக்கெய்சர் மைதானத்திற்கு அருகிலும் சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறு வேண்டி கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கிண்ணியாவிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
கண்டி – மஹியாவ பொது மயானத்திற்கருகிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வௌ்ளைத் துணி மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.