காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய, இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்க மாவட்ட நீதிமன்றில், காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி என்ற அமைப்பு, உள்ளிட்ட 3 பேர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படை துணை தலைமை தளபதி கன்வல்ஜீத் சிங் திலான் ஆகியோரிடம் இருந்து, 10 கோடி டொலர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஓகஸ்ட் 2, அக்டோபர் 6 ஆம் திகதிகளில் நடந்த விசாரணையில் மனுதாரர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து, வழக்கை நடத்த மனுதாரர்கள் முன்வரவில்லை என்று கூறி, டெக்சாஸில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.