தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த யாழ்ப்பாணம் மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டம் இன்று இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டதை, அடுத்து, மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் பதவியிழந்துள்ளார்.
2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இரண்டாவது முறையாக திருத்தங்களுடன் இன்று யாழ். மாநகரசபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.
ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டதால், வரவுசெலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால், மாநகர முதல்வர் ஆர்னோல்ட் உடனடியாக பதவி இழந்துள்ளார்.
இதனால் அடுத்த 14 நாட்களுக்குள் புதிய முதல்வரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஆர்னோல்ட் மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இன்றைய வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 10 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.