திருகோணமலை – கந்தளாயில் சிறிலங்கா விமானப்படையின் PT-6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியதை அடுத்து, PT-6 ரகத்தைச் சேர்ந்த அனைத்து விமானங்களும் பறப்பதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற PT-6 விமானம் கந்தளாயில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த விமானி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க ஐந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவொன்றை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன நியமித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழு நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால அறிக்கை கிடைக்கும் வரை, PT-6 ரகத்தைச் சேர்ந்த விமானங்களைப் பறப்பதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.