ஜெனிவா கூட்டத்தொடரில், சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய வலுவான பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் முன்வைத்துள்ள யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை விடவும் வலுவானதாக இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்த் தேசியத் தரப்புக்களும் ஒன்றிணைந்து பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய பிரேரணை தயாரிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து, வலுவானதொரு பிரேரணையை தயாரிப்பதற்குரிய முன்மொழிவுகளை வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தரப்புக்கள் இந்த விடயத்தை, தனித்தனியாக அரசியல் இலாபத்துக்காக கையாள முனைகின்ற போது, சிறிலங்கா அரசாங்கம் மிகஇலகுவாக நழுவிக் கொள்ளும் ஆபத்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.