கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில், வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகளை அழித்து, சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு, விவசாய காணிகள் வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபன் ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வவுனியா வடக்கில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் கிவுல் ஓயா திட்டத்துக்கு, அனுமதி கொடுத்துள்ளீர்களா என்று, இணைத்தலைவரான வட மாகாண ஆளுநரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, ஆளுநர் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், குறித்த திட்டத்திற்கான நிதி இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்று மாவட்ட செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், குறித்த திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், திட்ட அறிக்கையின் படி,
வவுனியா மாவட்டத்தில் 2500 ஏக்கர் காடுகளை அழித்து, விவசாய நிலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி அளிக்காமல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.