கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று அங்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் உணர்வு ரீதியான விடயமாக எனக்கு அமைந்திருக்கின்றது. இவ்விடயத்தில் இந்தியத் தரப்பினரே தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது தமிழக மக்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மறக்க முடியாதவையாக நன்றிக்குரியவையாக இருக்கின்ற போதிலும், எமது மக்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
இதன் காரணமாகவே அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளோம்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சுதல் போன்ற தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.