ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ, காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் செயலகத்தில் இன்று இடம்பெற்ற நான்கு பங்காளிக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர், முடிவில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நான்கு கட்சிகள் பங்கேற்ற கூட்டம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக தமிழர் தரப்பிலிருந்து மூன்று பிரதான தமிழ் தேசிய அணிகளும் சேர்ந்து, 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு யோசனையை சமர்ப்பித்தால்- அந்த யோசனையை இங்குள்ள சிவில் அமைப்புக்கள், மதப் பெரியார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் மற்றும் புலம்பெயர் அமைப்புகளும், ஏற்றுகொள்வது சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
இனிமேல் எக்காரணம் கொண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எடுத்துள்ளது..” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.