ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை, சிறிலங்காவுக்கு கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து, இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டதும், அதனை சிறிலங்காவுக்கு கொடையாக வழங்க இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார் என்று, சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு, குறிப்பிட்டளவு தடுப்பு மருந்தை கொடையாக வழங்குவதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விரைவில் தடுப்பூசிகளைப் பெறவதற்கான ஜனாதிபதி செயலணியை நியமிப்பது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருகிறார் என்றும், அவரது மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.