சுனாமி பேரழிவில் உயிர்நீத்தவர்களின் 16 ஆவது நினைவு நாள் இன்று, தமிழர் தாயகப் பகுதிகளிலும் சிறிலங்காவின் ஏனைய இடங்களிலும் நினைவுகூரப்பட்டுள்ளது.
சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று காலை 9.25 மணியளவில், சிறிலங்கா முழுவமும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகர பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு, காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திலும், இன்று காலை நிகனைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் காலை 7.50 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சுனாமி பேரழிவு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்டார் கூடத்திலும், இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் இன்று காலை 8.55 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சுனாமியில் உயிரிழந்த 243 பேரின் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலிலும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூபியிலும், இன்று காலை உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.
அதேவேளை, சுனாமி பேரழிவை நினைவு கூரும் தேசிய நாள் சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகங்களில் இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.