நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருந்தாலும், நேற்றைய தினத்தை விட குறைவாக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிவித்திருந்தது.
அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும், மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதன் அடிப்படையில், ரஜினி வீடு திரும்புவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடு திரும்புவது குறித்து நாளை காலை தான் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.