முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவரின் மகனான குகநாதன் கலையழகன் என்பவர், நான் மகிழ்வாக எனது கல்வியை தொடர நான்கு வயதில் என்னை விட்டு பிரிந்து சிறையில் வாடும் எனது அப்பாவை விடுதலை செய்யுங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றை நாட்டிலிருந்து விரட்டுவதற்கு மீட்டராய் இருங்கள் என அரசாங்கம் நாடு முழுவதிலும் அறிவுறுத்தல் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளது.
இந்த நிலையில், சிறையிலுள்ள தனது கணவர் உள்ளிட்ட கைதிகள் ஒரே அறையில் உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் அரசியல் கைதியின் மனைவியான குகநாதன் யோகராணி தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நடேசு குகநாதன் விடுவிக்கப்பட்டபோதும் மீண்டும் நான்கு மாதங்களில் 4ஆம் மாடியில் 6 நாட்களில் விசாரணை முடித்து விடுகிறோம் என அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
எனினும் தற்போது வரையில் அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.