படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளா சிவயோகச்செல்வன் சாம்பசிவ குருக்கள், அருட்தந்தை ஜோசப்மேரி உட்பட முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பதினைந்து வருட நினைவினை குறிக்கும் வகையில் 15 ஈகச்சுடர்கள் ஏற்பட்டன.
அதனை அடுத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மசாந்திக்காக மௌன பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து நினைவுப்பேருரை நடைபெற்றது.
இதன்போது ‘புதிய அரசியல் யாப்பும் சிறுபான்மை சமூகமும்’ என்னும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,
இதில், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.