வரும் ஜனவரி முதலாம் நாள், அனைத்து அரசாங்க பணியாளர்களும், சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தமது பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அனைத்து அரச நிறுவனங்களிலும், அதன் தலைவர் தலைமையில் சிறியளவில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு, இந்த உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வுக்குத் தலைமையேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இருந்து பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதிமொழி ஏற்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையிலேயே, புத்தாண்டு தினத்தன்று சிறிலங்கா அதிபரின் தேர்தல் வாக்குறுதியில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.