காஷ்மீர் எல்லையில் இராணுவத்தினருக்காக போர்க்கால அடிப்படையில் பதுங்கு குழிகள் அமைக்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி சபைத் தேர்தலில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வாக்களித்துள்ளனர். மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்யம் என்ற கொள்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் வென்றெடுத்துள்ளனர்.
பஞ்சாயத்து தேர்தலை நடத்தி மக்களுக்கு நல்லது செய்ய மறுத்ததால் ஜம்மு காஷ்மீர் அரசில் அங்கம் வகித்த பா.ஜ.க. அதனை விட்டு விலகவும் செய்தது.
அதேபோல், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்கூட புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அங்குள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதே கட்சிக்காரர்கள்தான் எமக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்க முனைகின்றனர்.
இதேவேளை, எல்லையில் தொடரும் தாக்குதல் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. இதனால், சம்பா, பூஞ்ச், கதுவா எல்லைகளில் இராணுவத்தினருக்கான பதுங்கு குழிகளை அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.