ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நடுகள் புதிய பிரேரணையொன்றை கொண்டுவருவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் புதிய பிரேரணையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்பிடமிருந்து தனித்தனியான மூன்று வரைவுகள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அரசியல் தரப்புக்களின் வரைவுகளுடன் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்ற வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் அமைப்புக்களும் அந்தந்த வரைவுகளில் கையொப்பம் இடவுள்ளதோடு அதுதொடர்பிலான அடுத்த கட்டச் செயற்பாடுகளிலும் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள வரைவானது, கால அவகாசத்தினை வழங்குவதாகவோ அல்லது, பொறுப்புக்கூறலை மலினப்படுத்துவதாகவோ அமையும் பட்சத்தில் அல்லது தம்முடன் கலந்தாலோசிக்கப்படாது அனுப்பபடும் தருணத்தில் அதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லை என்று பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியன தெரிவித்துள்ளன.