தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலைக்காக போராடும், குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டம், நல்லூர் ஆலய பின் வீதியில், இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே’, ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியாக பாகுபாடு காட்டாதே’, உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.