சீனாவின் தலையீடுகளுக்கு எதிராக செயற்படுவதை உறுதிப்படுத்தினால் மட்டுமே, சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
சீன அரசின் செல்வாக்கிற்கு எதிராக சிறிலங்கா தனது இறையாண்மையை வலியுறுத்துவதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், மத மற்றும் இன நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்க முன்வந்துள்ளது.
எனினும், சீன அரசின் செல்வாக்கிற்கு எதிராக, சிறிலங்கா அதன் இறையாண்மையை உறுதிப்படுத்திச் செயற்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் உறுதிப்படுத்திய பின்னரே, சிறிலங்காவுக்கான எதிர்கால நிதி உதவிகள் வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்கா இன மற்றும் மதக் குழுக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், ஆட்சியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும், இன மற்றும் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, சிறிலங்கா மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும், நிலைநிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எனினும் இந்த நிபந்தனைகள், காணாமல் போனவர்களை அடையாளம் காணவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் இறையாண்மையை ஊக்குவிக்கவும், சர்வதேச இராணுவ கல்வி மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட எந்தவொரு மனிதாபிமான அல்லது பேரழிவு நிவாரணத்திற்கும் பொருந்தாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.