போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால், கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்களை மதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன. அதனால் தமிழர் தரப்புக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்துடன் ஒத்துப்போக முடியாது என ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதனால், மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை விட, அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கரங்களில் இருந்து இந்த விவகாரம் வெளியே போகக் கூடாது.
அனைத்துலக அரங்கில் இது தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் தொடர்ந்தும் இருக்க வேண்டும், ஆனால் காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கூறும் பெரும்பான்மையினரின் கருத்து எனக்கு புரியவில்லை என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.