கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அனுமதிக்கக் கூடாது என்றும், ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெற்று வருகின்றன.
கொரோனா தொற்றினால் அதிகளவு முஸ்லிம்களோ சிறிலங்காவில் உயிரிழந்து வரும் நிலையில், உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இன்று யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்தப் போராட்டங்களில் தமிழ் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அனைவருது உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பௌத்த பிக்குகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு முன்பாக, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த பௌதத பிக்குகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஜனாதிபதி செயலக பாதுகாப்பில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையினருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடி அவர்களிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.