யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் ஆனோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் வரவுசெலவுத் திட்டம் இரண்டுமுறை தோல்வியடைந்ததால், ஆனோல்ட் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது.
இந்தநிலையில் நாளை புதிய முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போதே, மீண்டும் ஆனோல்டை முதல்வர் பதவிக்கு போட்டியில் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.