வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இனிமேல் முன்வைக்கப்படும் தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும்.
அது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடு உள்ளது,
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் எமது மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ளன.
எனவே, இதைவிட வீரியமான செயற்திறண் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் அனைவரிடமும் இருக்கிறது.
அனைத்து தரப்பினதும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
அந்த குழு ஓரிரு நாட்களுக்குள் சந்தித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க உள்ளது” என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.