யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 410 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தப் பரிசோதனைகளின் போதே உடுவிலைச் சேர்ந்த, ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கும், சுன்னாகம், தெல்லிப்பழை, கீரிமலை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மருத்துவர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில், கடந்த 12 மணித்தியாலங்களில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குச்சவெளியில் ஒருவருக்கும், மூதூரில் 5 பேருக்கும் உப்புவெளியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.