யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, முதல்வராக இருந்த ஆனோல்ட் பதவியிழந்த நிலையில், புதிய முதல்வரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது, முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆனோல்ட், மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதையடுத்து முதல்வரைத் தெரிவு செய்ய நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்திருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈபிடிபியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்துள்ளனர்.