காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின்புறத்தில், நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? என்பன போன்ற கோசங்களை எழுப்பினர்.
அதேவேளை, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத் தருமாறுக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ள வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.