எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மணிவண்ணனை ஆதரித்து, கட்சியினுடைய கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்.மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாங்கள் ஆரம்பத்திலிருந்தே மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானத்தினை எடுத்து காரணத்தினை வெளிப்படுத்தியபோதும், பலர் எம்மீது குறை கண்டனர். தற்போது அவருடைய தொடர்பாளர்கள் யார் என்பது வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ். மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப் பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது கட்சியின் கொள்கைகக்கு எதிராகச் சென்ற அத்தனை பேரையும் நாம் நிச்சயமாக நீக்குவோம். நாம் பலவீனப்படுவோம், பின்தள்ளப்படுவோம் என்று கருதவில்லை. எமது மக்கள் நாம் நியாயமாக நடப்பதை அங்கீகரிப்பார்கள் என்றார்.