உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில், இரண்டு விமானங்களில், 389 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவர்களில் நேற்று மூவருக்கும், இன்று மேலும் மூவருக்குமாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனில் இருந்து அழைத்து வரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து தொற்று இல்லை என்ற பிசிஆர் சோதனை அறிக்கையுடனேயே சிறிலங்காவுக்கு வந்துள்ளனர்.
அதேவேளை சுற்றுலாப் பயணிகள் வரும் போது சரியாக முக கவசங்களை அணியவில்லை என்றும், அவர்களை வரவேற்று நடனமாடியவர்கள் முக கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.