எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தளத்துக்கும் இடமளிப்பதில் இருந்து சிறிலங்கா விலகியிருக்க வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“அனைத்து உலகளாவிய சக்திகளுடனும், குறிப்பாக இந்தியாவுடனும், நல்லுறவைப் பேணுவதற்கும், புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து விலகி இருப்பதற்கும், சிறிலங்கா இவ்வாறான நிலைப்பாட்டைத் தொடர வேண்டும்.
எமது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு, எந்தவொரு வெளிநாட்டு தளங்களும் சிறந்த பதிலாக இருக்க முடியாது.
இந்தியாவுக்கான மூலோபாய பங்குகளுக்கு சிறிலங்கா முக்கியமானது.
சிறிலங்காவின் தலைவர்கள் எல்லா நேரங்களிலும் அணிசேரா கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவார்கள்.
நாங்கள் எதிரிகள் இல்லாத, அனைவருக்கும் நண்பர்களாக இருக்க விரும்புகிறோம்.
எனினும் எதிர்காலத்தில் முரண்பாட்டு நலன்களுக்கு வாய்ப்புள்ள பகுதியாக இருப்பதால், சிக்கலான புவிசார் அரசியல் சூழலை கவனமாக கையாளுவதிலும், நடுநிலையான அணிசேரா நாடாக இருப்பதிலும், சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றும் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி மேலும் கூறியுள்ளார்.