2020-ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்துள்ளது எனவும் ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் முதல் இனப்பாகுபாடு வரை அமெரிக்கர்கள் ஏராளமான வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது துணிவாக பணிகளை மேற்கொண்ட முதல்நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், தாதிகள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.
2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். ‘ என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.