நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும், பன்மைத்துவத்தையும் கருத்தில் கொள்ளும் ஒரு அரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசீலிக்கப்படமாட்டாது என்பது எமது கருத்தாகும்.
எமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகிறோம்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள்.
பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிட்ட பின்னரே ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம். ” என்றும் அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளார்.