சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (xi Jinping) தலைமையில், இயங்கும் சீன இராணுவத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் அங்கு இராணுவ சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தங்கள் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது என ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் ‘சவுத் சீனா மோர்னிங் போஸ்ட்’ (South China Morning Post) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 26ஆம் திகதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய சட்ட திருத்தங்கள், ஷி ஜின்பிங் (xi Jinping) தலைமையில் நாட்டின் இராணுவ தலைமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், புதிய இராணுவ தொழில் நுட்பங்கள், இணைய பாதுகாப்பு, விண்வெளி, மின் காந்தவியல் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் பங்கேற்பதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும் அணி திரட்டுவதற்கான நாடு தழுவிய ஒருங்கிணைப்பு முறையை உருவாக்குவதின் அவசியத்தை புதிய சட்ட திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.