குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்தார்.
ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கோடி ரூபா மதிப்பில் கொச்சி – மங்களூரு இடையே சுமார் 450 கிலோமீற்றர் வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, “450 கிலோமீற்றர் தூரமுள்ள இயற்கை எரிவாயு குழாய்த் திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன். இது இந்தியாவுக்கு குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரள மக்களுக்கு ஒரு முக்கியமான நாள்.
முந்தைய பல ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான காரணங்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், மெதுவாக முன்னேற்றமடைந்து வந்த இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் அதன் வேகமும் வளர்ச்சியின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன” என மேலும் தெரிவித்தார்.