சிறிலங்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கான பணிகளை வரையறை செய்யுமாறு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி, சுகாதார நெறிமுறைகளை செயற்படுத்தும் விடயத்தில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பங்கு குறித்த தெளிவின்மையானது, கொரோனா தொடர்பான சுகாதார நெறிமுறைகளை அமுல்படுத்தும் விடயத்தில், மாவட்டத்தில் உள்ள சுகாதார,மற்றும் மருத்துவ அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மருத்துவர் செனல் பெர்னாண்டோ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.