கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ள சீன தொழிலதிபர் ஜாக் மா, சீன அரசினால் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின், முதல்நிலை பணக்காரரான ஜாக் மா, அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயற்பாடுகள் குறித்து விமர்சித்ததை அடுத்து, சீன அரசின் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக, ஜாக் மா பொது வெளியில் தென்படாத நிலையில், அவர் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ‘பீப்பிள்ஸ் டெய்லி’ நாளிதழ், ஜாக் மா, கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன்,, சீன பத்திரிகைகள், அவரை ‘ரத்தம் குடிக்கும் காட்டேரி’ என, வசைபாடத் துவங்கியுள்ளன. இதையடுத்து, ஜாக் மா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைபட்டிருக்கவோ அல்லது வீட்டுக் காவலில் இருக்கவோ அதிகம் வாய்ப்பு உள்ளதாக, ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும், ‘தி ஏஷியா ரைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.