பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று அதிமுகவினர், மத்திய சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி காணொளி எடுத்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு சிபிஐ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 5 பேரினதும், கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 20ஆம் நாள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பொள்ளாச்சி நகர மாணவரணி செயலர் அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.